தமிழகத்தில் தனியார் ரெயில்களை இயக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வழித்தடங்கள்
தமிழகத்தில் தனியார் ரெயில்களை இயக்குவதற்கு 14 வழித்தடங்களை இந்திய ரெயில்வே அடையாளம் கண்டுள்ளது.
புதுடெல்லி
109 வழித்தடங்களில் 151 ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளது.இந்த திட்டத்திற்கு சுமார் 30,000 கோடி ரூபாய் தனியார் துறை முதலீடு செய்யப்படும் என்று தேசிய போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ரெயில்வே நெட்வொர்க்கில் பயணிகள் ரெயில்களை இயக்குவதற்கான தனியார் முதலீட்டிற்கான முதல் முயற்சி இதுவாகும். கடந்த ஆண்டு இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) லக்னோ-டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்தியது.
தமிழகத்தில் தனியார் ரெயில்களை இயக்குவதற்கு 14 வழித்தடங்களை இந்திய ரெயில்வே அடையாளம் கண்டுள்ளது. அதில் தினசரி 9 ரெயில்களும், 4 ரெயில்கள் வாரத்திற்கு ஒருமுறை என இயக்கப்படும்.
லோகோ டிரைவர்கள் மற்றும் காவலர்களைத் தவிர, ரெயில்கள் முழுக்க முழுக்க தனியார் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும். இவற்றில் பத்து ரெயில்கள் பின்வரும் வழிகளில் இயங்கும்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், புதுடெல்லி, மும்பை, ஹவுரா, ஜோத்பூர் பகுதி மற்றும் மங்களூரு வரை செல்லும்.
மீதமுள்ள நான்கு ரெயில்கள் புதுச்சேரியில் இருந்து சென்னை வழியாக செகந்திராபாத் , எர்ணாகுளம் - கன்னியாகுமரி, கோயம்புத்தூர் - திருநெல்வேலி மற்றும் கொச்சுவேலி - கவுகாத்தி வழித்தடங்களில் இயங்கும்.
மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களுக்கு செல்லும் நான்கு ரெயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படலாம், மீதமுள்ள ஆறு ரெயில்கள் சென்னை மத்திய மற்றும் எழும்பூரில் இருந்து இயக்கப்படலாம். இந்த வழித்தடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படாது. அந்த வழிகளில் ரெயில்களை இயக்க மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
தனியார் ரெயில்களை எவ்வளவு அதிக வேகத்தில் இயக்க அனுமதிப்பது குறித்து மண்டல அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். "இந்த ரெயில்கள் 160 கிமீ வேகத்தில் இயங்குவதற்காகதடங்களை மேம்படுத்த எந்த திட்டமும் இல்லை" என்று அந்த அதிகாரி ஒருவர் கூறினார்
அரக்கோணம் - ஜோலர்பேட்டை பிரிவில் ஒரு சில வழித்தடங்களை தவிர்த்து, பிற பாதைகளில், ரெயில்களை 110 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்க முடியும் எனவும் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் ரெயில்களை இயக்க ரெயில்வே அனுமதித்திருந்தாலும், இந்த நடவடிக்கை ரெயில்வேயை முழுமையாக தனியார்மயமாக்குவதற்கு வழி வகுக்கும் "இது இறுதியில் நிரந்தர ரெயில்வே ஊழியர்களின் பங்கைக் குறைக்கும் என்று மதுரை எம்.பி. சு வெங்கடேசன் கூறி உள்ளார்.