கொரோனா பாதிப்பு, இருதரப்பு உறவுகள் பற்றி ரஷிய அதிபர் புதினுடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை

கொரோனா பாதிப்பு, இருதரப்பு உறவுகள் பற்றி ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-07-02 23:07 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

கொரோனா பாதிப்பை தடுக்க இரு நாடுகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தின் சவால்களை கூட்டாக சந்திக்க இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு நிலவ வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த ஆண்டு இறுதியில், இந்தியாவில் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதுவரை இருதரப்பு தொடர்புகளை தொடர்ந்து பராமரிக்க சம்மதம் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இறுதியில், இந்தியாவுக்கு வரும் புதினை வரவேற்க ஆர்வமாக இருப்பதாக மோடி தெரிவித்தார். மேலும், இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதன் 75-வது ஆண்டு விழாவையொட்டி, மாஸ்கோவில் வெற்றிகரமாக அணிவகுப்பு நடத்தியதற்காக புதினுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.

நட்புறவின் அடையாளமாக அந்த அணிவகுப்பில் இந்தியா பங்கேற்றதை மோடி நினைவுகூர்ந்தார். தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்காக மோடிக்கு புதின் நன்றி தெரிவித்துக் கொண்டார். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்