தொடரும் பதற்றம்: லடாக் எல்லையில் இந்திய ராணுவ தளபதி இன்று திடீர் ஆய்வு

பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா-சீன எல்லையான லடாக்கின் லே பகுதியில் இந்திய ராணுவ தளபதி இன்று ஆய்வு நடத்த உள்ளார்.

Update: 2020-06-23 05:46 GMT
புதுடெல்லி

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் உள்ள லடாக்கின் லே பகுதியை இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று பார்வையிட உள்ளார். எல்லையின் பாதுகாப்பு மற்றும் களநிலவரம் குறித்து 
அவர் ஆய்வு செய்ய உள்ளார். 

ராணுவ தளபதி நரவனே உடன் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி பாதுகாப்பு படையின் கமாண்டர் மற்றும் முக்கிய ராணுவ அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். 

புதுடெல்லியில் நடைபெறும் உயர்மட்ட ஜெனரல்களுடனான  கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் லேவுக்குப் புறப்படுவார் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

சீனாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே லடாக் எல்லையில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்