வீட்டில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரியுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
வீட்டில் இருந்தபடியே யோகா தினத்தை அனுசரிக்குமாறு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2015ம் ஆண்டு ஐ.நா. ஜூன் 21ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி 6 வது சர்வதேச யோகா தினம் வருகிற 21ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்தநிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அனைவரும் வீடுகளில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் “தொற்றுநோயால் செயல்பாடுகள் பாதிக்கப் படலாம், ஆனால் நமது உற்சாகம் அல்ல. இந்த ஆண்டு யோகா தினத்தை வீடுகளிலிருந்து அனுசரிப்போம். குடும்பத்தினருடன் சேர்ந்து யோகா செய்வோம்“ என தெரிவித்துள்ளார்.