கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்களை காப்பாற்றுவதையே முக்கியமாக கொள்ள வேண்டும் - மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்களை காப்பாற்றுவதையே முக்கியமாக கொள்ள வேண்டும் என்று மாநிலங்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Update: 2020-06-17 22:45 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து கொண்டு காணொலி காட்சி வழியாக 15 மாநில முதல்-மந்திரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பெரிய அளவில் கூட்டம் கூடுதல், உடல் ரீதியில் இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், தினமும் திரளான மக்கள் பொதுவெளியில் நடமாடுதல், வீடுகள் சிறியனவாக இருத்தல் ஆகியவை சில நகரங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான போரை இன்னும் சவால் நிறைந்ததாக உருவாக்கி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் உயிர்களை காப்பாற்றுவதுதான் முக்கியமானதாக இருக்க வேண்டும். இதற்காக சுகாதார கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.

குணம் அடைந்தோர் அதிகம்...

கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதிலும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளிலும், பயிற்சி பெற்ற மனித வளத்திலும் நாம் முன்பை விட இப்போது சிறந்த நிலையில் இருக்கிறோம்.

சுகாதார உள்கட்டமைப்பு, தகவல் பரிமாற்ற அமைப்புகள், உணர்வுபூர்வமான ஆதரவு மற்றும் பொதுபங்கேற்புக்கு மாநிலங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனைகளை நடத்துதல், கண்காணித்தல், தொடர்பு தடம் அறிதல் மற்றும் தனிமைப்படுத்த வேண்டியதின் அவசியத்தை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆறுதல் அளிக்கிறது...

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தீவிர சிகிச்சையும், வென்டிலேட்டர்களும் தேவைப்படுகின்றன என்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முயற்சிகள் போற்றுதலுக்குரியது.

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கென்று 900 பரிசோதனைக்கூடங்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கான சிறப்பு படுக்கை வசதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான தனிமைப்படுத்தும் மையங்கள் இருக்கின்றன. பரிசோதனைக்கருவிகள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

உறுதி செய்துள்ளன...

1 கோடிக்கும் மேற்பட்ட சுய பாதுகாப்பு கவசங்களும் (பிபிஇ), கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான என்-95 முக கவசங்களும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சில இடங்களில் அதிகரித்து இருந்தாலும்கூட, நோயாளிகளின் பொறுமை, நிர்வாகத்தின் சிறப்பான பணி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றுகிறவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவை, பிரச்சினை கட்டுக்கு அடங்காமல் போய்விடாமல் இருப்பதை உறுதி செய்துள்ளன.

தகவல்களை சரியான நேரத்தில் வழங்குவது முக்கியம், ஹெல்ப்லைன் சேவைகள் உதவியற்றவை அல்ல. அவை மக்களுக்கு உதவுகின்றன.

மூத்த டாக்டர்கள் மற்றும் இளம் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த குழுக்கள், டெலிமெடிசின் (தொலை மருத்துவம்) மூலம் நோயாளிகளுக்கு வழிகாட்ட வேண்டும். ஹெல்ப்லைன் சேவையை இயக்க வேண்டும்.

குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிற வேளையில், யாருக்கேனும் தொற்று ஏற்படுகிறபோது, மக்கள் பீதி அடையத்தேவையில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பகிர்ந்து கொள்ளுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதில் சுகாதாரமாக இருக்க வேண்டியதின் நன்மைகளை மக்களுக்கு தொடர்ந்து நினைவுபடுத்துங்கள். முக கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் மக்களுக்கு நினைவுபடுத்துங்கள்.

மாநிலங்கள் ஒன்றுக்கொன்று சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்