புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.360 கோடி வசூல் - ரெயில்வேத்துறை தகவல்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.360 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வேத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கி உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ‘ஷ்ராமிக் ரெயில்கள்’ என்ற பெயரில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 4,450 ரெயில்கள் இயக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் 60 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி இருப்பதாகவும் ரெயில்வே அறிவித்து உள்ளது.
இந்த ரெயில்கள் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டாலும் குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும், அந்தவகையில் ஒருவருக்கு சராசரியாக ரூ.600 என்ற வகையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியுள்ளார். இதன் மூலம் ரெயில்வேக்கு ரூ.360 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறப்பு ரெயில்கள் இயக்கத்துக்கு ஆகும் செலவை மத்திய-மாநில அரசுகள் 85:15 சதவீதம் என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஒரு சிறப்பு ரெயில் இயக்கத்துக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை செலவாவதாக ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.