‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேச பொதுமக்களிடம் யோசனை கேட்கிறார், பிரதமர் மோடி
மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச பொதுமக்களிடம் யோசனை கேட்கிறார், பிரதமர் நரேந்திர மோடி.
புதுடெல்லி,
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
அடுத்த நிகழ்ச்சி, வருகிற 28-ந் தேதி ஒலிபரப்பாகிறது. இதில், தான் என்ன பேசவேண்டும் என்று தாங்கள் விரும்பும் விஷயங்களை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு இன்னும் 2 வாரங்கள் இருந்தாலும், உங்கள் யோசனைகளும், கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. அவை பற்றிய எனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கொரோனாவை எதிர்த்து போரிடுவது பற்றியும், இதர விஷயங்கள் பற்றியும் நிறைய யோசனைகளை தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘மை கவ்’ இணையதளத்திலோ, 1800117800 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி மூலமோ, அல்லது இந்தி, ஆங்கிலத்தில் பேசி பதிவு செய்த செய்திகளையோ அனுப்பலாம். அந்த குரல் பதிவுகள் கூட எனது ஒலிபரப்பில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.