கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: சென்னைக்கு மத்திய குழு வருகிறது
கொரோனாவை கட்டுப்படுத்த சென்னைக்கு மத்திய குழு வருகிறது.;
புதுடெல்லி,
இந்தியாவிலேயே மும்பை நகரில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்குகிறது.
மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுவதற்காக மத்திய அரசு குழுக்களை அமைத்து உள்ளது.
மத்திய அரசு அமைத்துள்ள குழுக்களில் ஒன்று ஒரு வாரத்துக்குள் சென்னை வர இருக்கிறது.
இந்த குழுவினர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதார அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.
இதேபோல் டெல்லி, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு நகரங்களுக்கு செல்லும் மத்திய குழுவினரும் அந்தந்த மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
இந்த தகவலை மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.