எண்ணெய் நிறுவனங்களின் நலனுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வு; ப. சிதம்பரம் டுவிட்டர் பதிவு
எண்ணெய் நிறுவனங்களின் நலனுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.;
புதுடெல்லி,
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வந்தன. பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் 16ந்தேதிக்கு பிறகு எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலையும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்தது. என்றாலும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.
அதேசமயம் கச்சா எண்ணெய் விலை சரிவால் பயனடையும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து தேக்க நிலையில் இருந்ததால் மத்திய அரசு மே 6ந்தேதி மீண்டும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 13 ரூபாயும் உயர்த்தியது. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்காமல் இருந்து வந்தன.
இந்த நிலையில், 82 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 7ந்தேதி அதிரடியாக விலையை உயர்த்தின. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசும், டீசல் விலை லிட்டருக்கு 52 காசும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு கடந்த 7ந்தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
தொடர்ந்து நேற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்பட்டது. இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இரண்டு நாட்களில் எரிபொருள் விற்பனை விலை 2 முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த முறை எண்ணெய் நிறுவனங்களின் நலனுக்காக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
பெட்ரோல் மீதுள்ள வரியை உயர்த்துகிறார்கள், ஏனென்றால் மத்திய அரசு ஏழை. அதற்கு வரி பணம் வேண்டும். பெட்ரோல் சில்லறை விலையை உயர்த்தினார்கள். ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகள். அவர்களுக்கு பணம் வேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள்தான் பணக்காரர்கள். ஆகவே அவர்கள் என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள் என்று அரசு நினைக்கிறது என அவர் தெரிவித்து உள்ளார்.