கொரோனா நோயாளி உடலை சவக்குழியில் வீசிய விவகாரம்; 3 ஊழியர்கள் சஸ்பெண்டு
புதுச்சேரியில் கொரோனா நோயாளி உடலை சவக்குழியில் வீசிய விவகாரத்தில் 3 ஊழியர்களை முதல் அமைச்சர் நாராயணசாமி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார்.
புதுச்சேரி,
சென்னையை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க தனியார் நிறுவன மேலாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக வில்லியனூர் அருகே உள்ள கோபாலன் கடை பகுதிக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் சென்னையில் இருந்து வந்திருந்ததால் கொரோனா தொற்று காரணமாக இறந்திருக்கலாமா? என்பது குறித்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து தனியார் நிறுவன மேலாளரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க சுகாதார துறையினர் மறுத்து விட்டனர். இதையடுத்து உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் கோபாலன் கடை இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏற்கனவே அங்கு 12 அடி ஆழத்துக்கு குழி தோண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த குழியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் முன்னிலையில் தனியார் நிறுவன மேலாளரின் உடல் புதைக்கப்பட்டது. கொரோனா காரணமாக அவரது இறுதிச்சடங்கில் குடும்பத்தினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே கொரோனா பாதித்த நபரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த அவரது மைத்துனர் மற்றும் குடும்பத்தினருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் புதுச்சேரியில் உயிரிழந்த சென்னை கொரோனா நோயாளியின் உடலை கோபாலன் கடை இடுகாட்டில் புதைக்கும் போது இறந்தவர்களுக்கான மரியாதை தரப்படாமல் அலட்சியமாக சவக்குழியில் தள்ளியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தால் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
இதையடுத்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் உடனடியாக விளக்கமளிக்குமாறு கலெக்டர் அருண் உத்தரவிட்டார். அதில், ‘இறந்தவரின் உடலை அவமதிக்கும் வகையில் செயல்பட்டது ஏன்? கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது ஏன்?’ என்று கேட்கப்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகள் தரும் விளக்கத்தை தொடர்ந்து பிணத்தை புதைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா நோயாளி உடலை புதைத்த விவகாரத்தில் 3 ஊழியர்களை சஸ்பெண்டு செய்யும்படி முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பத்து உள்ளார். இதன்படி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் 2 பேர், சுகாதார துறை ஊழியர் ஒருவர் என 3 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.