பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

82 நாட்களுக்கு பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Update: 2020-06-08 00:15 GMT
புதுடெல்லி, 

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வந்தன.

பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதிக்கு பிறகு எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலையும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்தது. என்றாலும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.

அதேசமயம் கச்சா எண்ணெய் விலை சரிவால் பயனடையும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து தேக்க நிலையில் இருந்ததால் மத்திய அரசு மே 6-ந் தேதி மீண்டும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 13 ரூபாயும் உயர்த்தியது.

ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்காமல் இருந்து வந்தன.

இந்த நிலையில், 82 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அதிரடியாக உயர்த்தின.

அதாவது பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 60 காசுகள் உயர்த்தின. வரி நிலவரங்களுக்கு ஏற்ப மாநிலங்களில் இந்த விலையில் சற்று மாற்றம் உள்ளது.

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசும், டீசல் விலை லிட்டருக்கு 52 காசும் உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 ரூபாய் 54 காசில் இருந்து 76 ரூபாய் 7 காசாக அதிகரித்தது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 68 ரூபாய் 22 காசில் இருந்து 68 ரூபாய் 74 காசாக அதிகரித்தது.

டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 60 காசு அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 71 ரூபாய் 26 காசில் இருந்து 71 ரூபாய் 86 காசாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 69 ரூபாய் 39 காசில் இருந்து 69 ரூபாய் 99 காசாகவும் உயர்ந்து உள்ளது.

இதேபோல் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 59 காசு அதிகரித்து 78 ரூபாய் 91 காசாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை லிட்டருக்கு 58 காசு அதிகரித்து 68 ரூபாய் 79 காசாகவும் உயர்ந்தது.

கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 59 காசு அதிகரித்து 73 ரூபாய் 89 காசாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை லிட்டருக்கு 55 காசு அதிகரித்து 66 ரூபாய் 17 காசாகவும் உயர்ந்தது.

இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தை பொறுத்தமட்டில், மே 3-ந் தேதி தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியில் மாற்றம் செய்து அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான மறுநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. ஒரேநாளில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 26 காசும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 51 காசும் அதிகரித்து இருந்தது.

அதன்பின்னர், விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருப்பதால் அவற்றின் விலை அதிகரித்து இருக்கிறது.

மேலும் செய்திகள்