திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த, திருமணம் செய்ய அனுமதி - தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த, திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இன்றும், நாளையும் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிரந்தர ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். 10-ந்தேதி திருமலை பாலாஜி நகரில் வசிக்கும் உள்ளூர் மக்கள், திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 11-ந்தேதி முதல் ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் அனுப்பப்படுகின்றனர். திருமலையில் உள்ள கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தலாம். மேலும் திருமலையில் பொதுமக்கள் திருமணங்களை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.