கொரோனாவால் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை மழை: திரும்ப அழைக்க வாரி இறைக்கும் பஞ்சாபியர்கள்

கொரோனாவால் இடம் பெயர்ந்த தொழிலாளர்களை, திரும்ப அழைக்க சலுகைகளை பஞ்சாபியர்கள் வாரி இறைத்து வருகினறனர்.

Update: 2020-06-05 22:45 GMT
 
அடர்ந்த இருளுக்கு பின்னேயும் சூரியன் உதித்து ஒளி தரப்போவது நிச்சயம். இது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ கொரோனாவால் எண்ணற்ற அல்லல்களை அனுபவித்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அப்படியே பொருந்தும்
.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நீண்டதொரு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்தனர். வாழ்வாதரம் இழந்த நிலையில் சொந்த மண்ணுக்காவது போய்ச்சேருவோம் என நினைத்தனர்.

ஆரம்பத்தில் பொது போக்குவரத்து முடக்கத்தால் குடும்பம், குடும்பமாக இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிழைக்க வந்த மாநிலத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாகவே திரும்பினர். கொளுத்தும் வெயிலிலும் கால்களில் செருப்பு கூட இன்றி அவர்கள் அல்லல்களை அனுபவித்தனர்.

பின்னர் மத்திய அரசு சிறப்பு ரெயில்களை விட்டது. அதை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி ஊர்களுக்கு திரும்பினர்.

மும்பை, கேரளா, டெல்லி போன்ற இடங்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் அனுப்பி வைத்த அபூர்வ நிகழ்வுகளும் அரங்கேறின.

இப்போது பஞ்சாப் மாநிலத்தில் நெல் அறுவடை சீசன் தொடங்கப்போகிறது. ஆனால் உள்ளூரில் தொழிலாளர்கள் போதுமான அளவுக்கு கிடையாது.

உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனாவால் ஊர்களுக்கு திரும்பி விட்டதால் இப்போது அறுவடைக்கு ஆட்கள் இல்லாத நிலை பஞ்சாப் மாநிலத்தில் வந்து விட்டது. இதனால் இடம் பெயர்ந்த தொழிலாளர்களைத்தான் விவசாயிகள் திரும்ப அழைக்க தீர்மானித்துள்ளனர். அதுவும் சும்மா இல்லை. சலுகைகளை வாரி வழங்க முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

அவர்களுக்கு திரும்பி வர முன் பதிவு செய்த ரெயில் பயண டிக்கெட்டுகளை வழங்கவும், முன்கூட்டியே கூலியை தரவும், கூலியை உயர்த்திக்கொடுக்கவும் பஞ்சாப் விவசாயிகள் மனம் உவந்து முன்வந்துள்ளனர்.

கூலிகள் இரு மடங்காகி இருக்கிறது. ஏக்கருக்கு ரூ.6000 முதல் ரூ.7000 வரை ஆகி இருக்கிறது.

இடம் பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பஞ்சாப் மாநில தொழில்துறை மந்திரி சுந்தர் ஷாம் அரோரா முன் வைத்துள்ளார்.

10-ந் தேதி நெல் அறுவடை தொடங்க வேண்டிய நிலையில் அறுவடைக்கு ஆட்கள் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது என்று விவசாயிகள் சொல்கிறார்கள். எல்லை மாவட்டமான அமிர்தசரஸ்சில் அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் அல்லாடுவதாக சர்ப்ஜித் சிங் லாடி என்ற விவசாயி வேதனைப்படுகிறார்.

“முதலில் பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு பஸ்களை அனுப்பித்தான் தொழிலாளர்களை வரவழைக்கலாம் என்று முடிவு எடுத்திருந்தோம்; இப்போது ரெயில் சேவை தொடங்கி இருப்பதால் எங்கள் திட்டங்களை மாற்றி விட்டோம். இவர்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய ரெயில் டிக்கெட்டுகளை எடுத்து கொடுக்கிறோம். அவர்கள் 14-ந் தேதியில் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார் அந்த விவசாயி.

பர்னாலா மாவட்டத்தை சேர்ந்த சினிவால் என்ற கிராம விவசாயியான ஜக்சீர் சிங், “நானும் இன்னும் சில விவசாயிகளும் சேர்ந்து வயல் வேலைகளுக்கு தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு 3 பஸ்களை உத்தரபிரதேசத்துக்கும், பீகாருக்கும் அனுப்பி இருக்கிறோம். அவர்கள் வந்ததும் எங்கள் வயல்களிலேயே தங்கி வேலை செய்வார்கள். கொரோனா பரவலால் வேறு இட வசதி செய்து தர முடியாத சூழல்” என்கிறார்.

இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே அவர்களது வங்கிக்கணக்குகளில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூலிப்பணத்தை டெபாசிட்டாக செலுத்தவும் தொடங்கி விட்டதாக சொல்கிற விவசாயிகளும் பஞ்சாப்பில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிபந்தனை விதிப்பதுவும் நடக்கிறது. என்ன நிபந்தனை தெரியுமா? “ அறுவடை நடந்து, அதன்பின்னர் விதைப்பு பணி முடிந்த பிறகு எங்களை சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்து விட வேண்டும்” என்பதுதான் நிபந்தனை.

விவசாயிகளுக்கு மட்டும் ஆள் பற்றாக்குறை இல்லை.

பஞ்சாப்பில் தொழில் துறையிலும் ஆள் பற்றாக்குறைதான்.

இதுபற்றி ஐக்கிய சைக்கிள் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.எஸ். சாவ்லா கூறும்போது, “பல தொழில் அதிபர்களும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். நாங்களும் அப்படியே அவர்களை திரும்பி வாருங்கள், அதற்கு ஆகிற செலவினை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறோம். இடம் பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் பஞ்சாப்புக்கு அழைத்து வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையும் வைக்கிறோம்” என்கிறார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருக்கிற உள்ளூர் இளைஞர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்த விரும்புவதாக பஞ்சாப் அரசு அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆனாலும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பஞ்சாப்பில் இருக்கிற வரவேற்பே தனி. அவர்கள் காட்டில் மழை பெய்யப்போகிறது!

மேலும் செய்திகள்