இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று
இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.;
புதுடெல்லி
இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
டெல்லியில் சவுத் பிளாக்கில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் பணியில் இருந்த மேலும் 35 அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே சீன எல்லை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனான காணொளி ஆலோசனை கூட்டத்தில் அஜய்குமார் பங்கேற்றதால் அதில் பங்கேற்றவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு செல்லாததால் அவர் தனிமைப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.