டெல்லி கவர்னர் மாளிகை ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா
டெல்லி கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தேசிய தலைநகர் டெல்லியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி 20 ஆயிரத்து 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 523 பேர் பலியாகி உள்ளனர். பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும், தனிமைப்படுத்தப்பட்டும் வருகிறார்கள்.
டெல்லி கவர்னர் அனில் பைஜாலின் மாளிகையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதியானது. இதனையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று தெரியவந்தது. இதில் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள் என 13 பேருக்கு கொரோனா தொற்று இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதேபோல் டெல்லி மாநில அரசு அதிகாரிகள் 6 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.