பஸ்கள் குறித்து பொய் வாக்குறுதி: பிரியங்கா மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
பஸ்கள் குறித்து பொய்யான வாக்குறுதி அளித்த பிரியங்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறியதாவது:-
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர ஆயிரம் பஸ்களை காங்கிரஸ் அனுப்புவதாக பிரியங்கா கூறினார். ஆனால், சுமார் 100 பதிவெண்கள், வேறு வாகனங்களுக்கானவை. 297 பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் இல்லை. 68 பஸ்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லை.
மேலும், ராஜஸ்தான் மாநில அரசு அனுப்பி வைத்த பஸ்களை, காங்கிரஸ் கட்சி அனுப்பியதுபோல் பிரியங்கா காட்டியுள்ளார். அவர் பொய் வாக்குறுதி அளித்து, ராஜஸ்தான் மக்களையும், உத்தரபிரதேச மக்களையும் அவமதித்துள்ளார். ஆகவே, இரு மாநில மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.