மே. வங்காளத்தில் இன்று கரையை கடக்கிறது அம்பன் புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை
அம்பன் சூப்பர் புயல் இன்று மாலை மேற்கு வங்காளம் -வங்காளதேசம் இடையே கரையைக் கடக்க உள்ளது.;
கொல்கத்தா,
வங்காள விரிகுடாவில் அம்பன் புயல், நேற்று முன்தினம் அதிதீவிர புயலாக உருவெடுத்தது. அந்த புயல், மேலும் தீவிரமடைந்து, இன்று பிற்பகலில் மேற்கு வங்காளத்தின் டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹடியா தீவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மேற்கு வங்காளத்தின் கரையோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டுவதுடன், பெருத்த சேதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அண்டை மாநிலமான ஒடிசாவின் கடலோர பகுதிகளிலும் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 185- கி.மீட்டர் வரை சூறாவளிக் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், செல்போன் டவர்கள், மின்சார கோபுரங்கள், கூரை வீடுகள், பலவீனமான அடித்தளங்களைக் கொண்ட கட்டிடங்கள் சேதத்திற்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.