இந்தியாவில் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 122 பேர் பலி; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் 122 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துவிட்டது.

Update: 2020-05-13 23:30 GMT
புதுடெல்லி,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இதுவரை உலகம் முழுவதும் 43 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கையும் 3 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதுவரை தன்னை தடுக்க மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்காததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கொரோனா தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோரை நோய் பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. சுமார் 3 ஆயிரம் பேர் தினசரி இந்த வைரஸ் தொற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இந்தியாவில் புதிதாக கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினந்தோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வைரஸ் தொற்றால் புதிதாக 3,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74,281 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதே 24 மணி நேரத்துக்குள் 122 பேர் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,293-ல் இருந்து 2,415 ஆக உயர்ந்துள்ளது. இதில் 921 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். குஜராத்தில் 537 பேரும், மத்திய பிரதேசத்தில் 225 பேரும், மேற்கு வங்காளத்தில் 198 பேரும், ராஜஸ்தானில் 117 பேரும், டெல்லியில் 86 பேரும், உத்தரபிரதேசத்தில் 82 பேரும், தமிழகத்தில் 64 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

ஆந்திராவில் 46 பேரையும், பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் தலா 32 பேரையும், கர்நாடகாவில் 31 பேரையும், அரியானாவில் 11 பேரையும், பீகாரில் 6 பேரையும், கேரளாவில் 4 பேரையும், ஒடிசா, சண்டிகர் மற்றும் ஜார்கண்டில் தலா 3 பேரையும், அசாம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 2 பேரையும், உத்தரகாண்ட், மேகாலயா மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு மட்டும் 24,427 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் 9,227 பேரையும், குஜராத்தில் 8,903 பேரையும், டெல்லியில் 7,639 பேரையும், ராஜஸ்தானில் 4,126 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் 3,664 பேரும், மேற்குவங்காளத்தில் 2,173 பேரும், ஆந்திராவில் 2,090 பேரும், பஞ்சாபில் 1,914 பேரும், தெலுங்கானாவில் 1,326 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மற்ற மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழே உள்ளது.

மேலும் செய்திகள்