உத்தரப்பிரதேசத்தில் சிறு, குறு தொழில்களுக்கு நாளை முதல் கடன் வழங்கப்படும்: யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் சிறு, குறு தொழில்களுக்கு நாளை முதல் கடன் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார வளர்ச்சி குறித்த சிறப்பு திட்டங்களை நிதி-மந்திரி அறிவிப்பார் என பிரதமர் மோடி நேற்று கூறி இருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இணையதளம் வழியாக கடன் வழங்கும் திட்டத்தை நாளை தொடங்க உள்ளதாக உத்தரப்பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு இணையதளம் வழியாக கடன் வழங்கும் திட்டம் நாளை தொடங்க உள்ளது. அதில் ரூ. 1,600 கோடி முதல் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் நடத்தும் சுமார் 36,000 வணிகர்களுக்கு கடன் வழங்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு கடன் வழங்க ரூ. 3 லட்சம் கோடி அறிவித்த நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.