கேரளாவில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 524ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 489 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் 32 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 3 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள். கோட்டயம் மற்றும் பத்தினம் திட்டா பகுதியில் தலா ஒருவர் ஆவர். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், கேரளாவுக்கு சாலை மார்க்கமாக 33,010 பேரும் விமானம் மூலமாக 1406 பேரும் கப்பல் மூலமாக 833 பேரும் வருகை தந்திருப்பதாக கூறினார். செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு, செவிலியர்களின் சேவைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.