டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலம் தேறி இன்று வீடு திரும்பினார்.
புதுடெல்லி,
நெஞ்சு வலி காரணமாக நேற்று முன் தினம் (ஞயிற்றுக்கிழமை) இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதிஷ் நாயக் தலைமையிலான குழுவினர் மன்மோகன் சிங்கிற்கு சிகிச்சையளித்தனர். மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருந்தாலும் அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தால் நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில், கொரோனா நெகட்டிவ் என்றே முடிவுகள் வெளியாகின. மன்மோகன் சிங்கின் உடல் நிலை தேறியதையடுத்து அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.