விஷவாயு கசிவு எதிரொலி; தொழிற்சாலைகளுக்கான புதிய நெறிமுறைகள் வெளியீடு
ஆந்திராவில் விஷவாயு கசிவு எதிரொலியாக தொழிற்சாலைகளுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.;
விசாகப்பட்டினம்,
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் ஆர்.ஆர். வெங்கடாபுரம் கிராமத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்து உள்ளது. ஊரடங்கால் ஆலை மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த 7ந்தேதி திடீரென இதில் இருந்து ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதுடன், சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டன. பலர் நடந்து செல்லும் வழியிலேயே மயக்கமடைந்து, கீழே சரிந்தனர்.
இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். இதன் பாதிப்பு 1 முதல் 1.5 கி.மீ. தொலைவுக்கும், வாயு பரவல் 2 முதல் 2.5 கி.மீ. தொலைவு வரைக்கும் இருந்தது. உடனடியாக, கிராமத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அந்த பகுதியில் இருந்து 120 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியானார்கள். விசாகப்பட்டினம் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதன் எதிரொலியாக, தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வருகிற மே 17ந்தேதி வரை நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும். இதற்கு பின் செயல்படும் தொழிற்சாலைகள், பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்த பின்னரே உற்பத்தியை தொடங்க வேண்டும். முதலில் சோதனை ஓட்டமாகத்தான் தொழிற்சாலைகளை துவங்க வேண்டும்.
முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளது.