விஷவாயுக் கசிவு துயரம்: மத்திய மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
விஷவாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.;
புதுடெல்லி,
விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 9 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் மூச்சுவிடச் சிரமம், மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாலை ஏற்பட்ட இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது. தகவலறிந்ததும் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த தேசியப் பேரிடர் குழ, மீட்பு பணிகளில் ஈடுபட்டது.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இந்த வாயுக்கசிவு குறித்து விசாரிக்க விசாகப்பட்டிணத்துக்கு சென்றார். விஷவாயுக்கசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி நலம் விசாரித்தார். இதற்கிடையே, விஷவாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உடனே பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் கவுன்சில் நோட்டீஸ் விடுத்துள்ளது.