இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமுதாய பரவல் நிலையை எட்டவில்லை - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, சமுதாய பரவல் நிலையை எட்டவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கூறியதாவது:-

Update: 2020-05-05 23:45 GMT
புதுடெல்லி, 

மத்திய அரசு, சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும். கொரோனா சமுதாய பரவல் நிலையை எட்டாத அளவுக்கு இந்தியா தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் ஒன்றும் பெரிய ராக்கெட் அறிவியல் அல்ல என்பதை நமக்கு உணர்த்திவிட்டது.

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கைகளையும், சுற்றுச்சூழலையும் சுத்தமாக பராமரித்து வருகிறோம். இதுவே ஒரு தொடர் பழக்கவழக்கமாக மாறும் என்று நம்புகிறேன். அப்படி மாறினால், கொரோனா பீதி முடிவடைந்து, திரும்பி பார்க்கும்போது, கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளதாக நாம் கருத முடியும்.

இந்த பழக்கவழக்கங்கள் தொற்றுநோய்களை குறைக்கும். ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும். நாம் சின்னம்மை, போலியோ ஆகிய தொற்றுநோய்களை தவிர, பிற தொற்றுநோய்களை முழுமையாக ஒழிக்கவில்லை. எனவே, மற்ற தொற்றுநோய்கள் மீண்டும் வரலாம்.

மேலும், இந்த கொரோனாவானது, நமது சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ், பாதுகாப்பு கவசங்கள், என்-95 ரக முக கவசங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

பரிசோதனை வசதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மருந்து மூலப்பொருட்கள் உற்பத்தியையும் அதிகரிக்க முயற்சி நடந்து வருகிறது. இதன்மூலம் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலைமை மாறும்.

சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறப்பால் பெருமளவு கூட்டம் திரண்டுள்ளது. எப்போதுமே பின்விளைவுகளை கணித்தே முடிவுகளை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறினார்.

மேலும் செய்திகள்