சட்ட அமைச்சக உயர் அதிகாரிக்கு கொரோனா: டெல்லி சாஸ்திரி பவனுக்கு ‘சீல்’ வைப்பு

மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், டெல்லி சாஸ்திரி பவனின் ஒரு தளத்துக்கு சீல் வைக்கப்பட்டது.;

Update: 2020-05-05 21:39 GMT
புதுடெல்லி, 

மத்திய சட்ட அமைச்சகத்தில் துணை செயலாளர் அந்தஸ்து கொண்ட ஒரு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அமைச்சகங்கள் செயல்படும் டெல்லி சாஸ்திரி பவனின் இரண்டாவது தளத்தில் மத்திய சட்ட அமைச்சகம் இயங்கி வருகிறது. அங்குதான் அவர் பணியாற்றி வருகிறார்.

அவர் தன் உறவினரை அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்று வந்ததாகவும், ஆஸ்பத்திரியில் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சாஸ்திரி பவனில் அந்த அதிகாரி பணியாற்றி வந்த அலுவலகம் உள்ள தளத்தில் ஏ பிரிவில் முதல் மூன்று நுழைவாயில்கள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. அங்கு கிருமிநாசினி தெளிப்பு பணி நடந்தது. மின்தூக்கிகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், அந்த அதிகாரி தொடர்பு கொண்ட நபர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில், நிதி ஆயோக் கட்டிடத்தை தொடர்ந்து, டெல்லியில் சீல் வைக்கப்படும் இரண்டாவது அரசு கட்டிடம் இதுவாகும்.

அத்துடன், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அலுவலகம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமையகம், எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் ஆகியவையும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்