பத்திரிகையாளர்கள் உள்பட கொரோனா பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு: மம்தா பானர்ஜி அறிவிப்பு
பத்திரிகையாளர்கள் உள்பட கொரோனா பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்க உள்ளதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 33 உயிரிழப்புகள் உள்பட, 922 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் பத்திரிகையாளர்கள் உள்பட கொரோனா பணியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில், “ ஜனநாயகத்தில் பத்திரிகைகளின் பங்கு பாராட்டுக்குரிய ஒன்றாகும். பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட கொரோனா பணியாளர்கள் பலருக்கும் மேற்குவங்க அரசு ரூ .10 லட்சம் வரை சுகாதார காப்பீட்டை அறிவித்துள்ளது. பத்திரிகை ஒரு ஜனநாயகத்தின் நான்காவது தூணாகும், அவர்கள் தங்கள் கடமைகளை அச்சமின்றி செயலாற்ற வேண்டும். ஊடகவியலாளர்கள் சமூகத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்புக்காக நாங்கள் அவர்களை மதிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.