மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளை வெளியிட்ட மத்திய அரசு: தமிழகத்தில் எத்தனை?
கொரோனா பாதிப்பை பொறுத்து மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட 2 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த சூழலில் மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு , பச்சை மண்டல பகுதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டில் மொத்தம் கொரோனா இல்லாத 319 பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் ஒரு மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டுமே இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மாவட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டியத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டல பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் உள்ளன. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 19 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 36 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள் பட்டியலிலும், 20 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் உள்ளன.
கேரளாவில் 2 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 10 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 2 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 1 மாவட்டம் ஆரஞ்சு மண்டலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 3 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் சிவப்பு மண்டலங்கள் பட்டியலில் எந்த ஒரு மாவட்டமும் இடம் பெறவில்லை.