இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-05-01 11:21 GMT
புதுடெல்லி,

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி அனைத்து நாடுகளையும் பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை எப்படியாவது சரிகட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. 

சில நாடுகள் தொழில் தொடங்க அனுமதி வழங்கி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்தியாவில் நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து வைரஸ் தாக்கம் இருந்து வருவதால் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்தத்தகவலை தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35,043 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை   8889 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1147- ஆக உயர்ந்துள்ளது.  நோய் தொற்று சங்கிலியை உடைக்க சிவப்பு மற்றும் ஆரஞ்சு மாவட்ட பகுதிகளில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். 

மேலும் செய்திகள்