இந்தியாவில் கொரோனாவுக்கு 273 பேர் பலி - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 273 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது.

Update: 2020-04-12 23:46 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை.

நேற்று முன்தினம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக் கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 8 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆகும்.

இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,447 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 765 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மராட்டிய மாநிலத்தில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையிலும் அம்மாநிலமே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அங்கு இந்த வைரஸ் தொற்றால் சுமார் 1,700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதைப்போல டெல்லியிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு 1000-க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்