கொரோனா ஆரம்ப அறிகுறி நபர்களை தனிமைப்படுத்த ரெயில் பெட்டி வார்டுகள் பயன்படும்; ரெயில்வே நிர்வாகம்

கொரோனா ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரெயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Update: 2020-04-09 14:23 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 166 ஆக உயர்ந்து உள்ளது.  இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் இப்படி வேகமாக பரவுகிறபோது, பாதிப்புக்கு ஆளானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான அளவுக்கு இடவசதி தேவைப்படுகிறது.

இதை சமாளிப்பதற்காக ரெயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்தியன் ரெயில்வே தன்னிடம் உள்ள வசதிகளை பயன்படுத்த முன்வந்தது.  இதன்படி, ரெயில் பெட்டிகள் வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி 3.2 லட்சம் படுக்கைகளுடன் 20 ஆயிரம் ரெயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற முடிவு செய்தது. முதற்கட்டமாக 5 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்துதல் வார்டுகளாக மாற்ற இலக்கு நிர்ணயித்து, அந்த இலக்கில் பாதியான 2 ஆயிரத்து 500 ரெயில் பெட்டிகளை குறுகிய கால அவகாசத்தில் ரெயில்வே நிர்வாகம் மாற்றியுள்ளது.

ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களும், குறுகிய கால அவகாசத்தில், ரெயில் பெட்டிகளில் நிறைய மாற்றங்கள் செய்து ‘வார்டு’களாக மாற்றி அசாத்திய பணிகளை செய்து முடித்துள்ளன.

2 ஆயிரத்து 500 ரெயில் பெட்டிகள் தனிமைப்படுத்துதல் ‘வார்டு’களாக மாற்றி, அதில் அவசர நேரத்தில் பயன்படுத்த 40 ஆயிரம் தனிமைப்படுத்துதல் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

இதுபற்றி தெற்கு ரெயில்வே நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் அளித்துள்ள விளக்கத்தில், கொரோனா தொற்று ஆரம்ப கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரெயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்