ஆய்வுக்கூடங்களில் கொரோனாவை கண்டறிய இலவச பரிசோதனை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கொரோனா பரிசோதனையை ஆய்வுக்கூடங்களில் இலவசமாக நடத்த கட்டளை பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.;
புதுடெல்லி,
கொரோனோ வைரஸ் பரிசோதனைக்காக தனியார் ஆய்வகங்கள் வசூலிக்கும் கட்டணம் தொடர்பாக சஷாங் தியோ சுதி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைக்காக தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆய்வகங்கள் 4,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறி இருப்பதாகவும், ஆனால் இந்த தொகை சாமானிய மக்களுக்கு மிகவும் அதிகம் என்றும், எனவே கட்டணம் இல்லாமல் இலவசமாக பரிசோதனை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் கூறி இருந்தார்.
மேலும் கொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிக்க அரசுக்கு உத்தரவிடுமாறும் மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், நாடு முழுவதும் 118 ஆய்வுக்கூடங்கள் மூலம் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்ததாகவும், பின்னர் மேலும் 47 தனியார் ஆய்வுக்கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு எவ்வளவு நாள் நீடிக்கும், மேலும் எத்தனை ஆய்வுக்கூடங்கள் தேவைப்படும் என்று தீர்மானிக்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அரசின் ஆய்வுக்கூடங்களிலும், அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடங்களிலும் கொரோனா பாதிப்பை கண்டறியும் பரிசோதனையை கட்டணம் இன்றி இலவசமாக நடத்த வேண்டும் என்றும், இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.