விளக்கேற்றும் நிகழ்ச்சி; நாடு முழுவதும் சூடு பிடித்த அகல் விளக்கு விற்பனை
விளக்கேற்றும் நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் அகல் விளக்கு விற்பனை சூடு பிடித்தது.
புதுடெல்லி,
உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75ல் இருந்து 77 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 213ல் இருந்து 267 ஆக உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றும்பொழுது, வருகிற 5ந்தேதி (இன்று) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசற்படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என கூறினார்.
கொரோனா பாதிப்புக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப மக்கள் தங்களது இல்லங்களில் தீபம் ஏற்றிய விளக்குகளை ஏந்த தயாராகி விட்டனர். நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் அகல் விளக்குகளை வாங்கி சென்றனர்.
நாட்டின் தலைநகர் டெல்லியில், சந்தைகளில் அதிக அளவிலான மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கான பொருட்களுடன் அகல் விளக்குகளை வாங்கி சென்றனர்.
இதேபோன்று பீகாரின் பாட்னா, உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் ஆகிய இடங்களிலும் சந்தையில் கூடிய மக்கள், இருளை வெற்றி பெறும் நோக்கில், அதிகளவில் அவற்றை வாங்கி சென்றனர்.