கொரோனா வைரஸ்: 21 ஆயிரம் நிவாரண முகாம்களில் 6½ லட்சம் பேர் தங்க வைப்பு

நாடு முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நிவாரண முகாம்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2020-03-31 20:45 GMT
புதுடெல்லி, 

மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நிவாரண முகாம்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், கொரோனாவால் இருப்பிடங்களுக்கு செல்ல முடியாத, ஆதரவற்ற 6 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த முகாம்களில் நாள்தோறும் 23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

ஊரடங்கு சூழ்நிலையை மாநிலங்களுடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இதுவரை நிலைமை திருப்திகரமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் திருப்திகரமாக நடந்து வருகிறது.

மாநிலங்களுக்கிடையிலான சரக்கு போக்குவரத்து, சுமுகமாக நடந்து வருகிறது. ஊரடங்கு உறுதியாக அமல்படுத்தப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கில் இருந்து வங்கிகள், ஏ.டி.எம். சேவைகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சில மாநில அரசுகள், வங்கிகளின் பணிநேரத்தை குறைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரதமரின் ஏழைகள் நிதிஉதவி திட்டத்தின்கீழ் ரூ.27 ஆயிரத்து 500 கோடி நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரமும், அடுத்தடுத்த வாரங்களிலும் இந்த பணம், வங்கிக்கணக்கு மூலமாக ஏழைகளுக்கு வழங்கப்படும். எனவே, வங்கிகள் முழு நேரமும் இயங்குவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்