பிரதமர் மோடியின் சமூக வலைத்தள கணக்குகளை கையாண்ட பெண்கள்: தமிழகத்தை சேர்ந்த இருவரும் இடம்பெற்றனர்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடியின் சமூக வலைத்தள கணக்குகளை தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட 7 பெண் சாதனையாளர்கள் கையாண்டனர்.

Update: 2020-03-08 23:30 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இதற்காக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் தனித்தனியாக அவர் கணக்கு வைத்துள்ளார். இந்த தளங்கள் ஒவ்வொன்றிலும் அவரை கோடிக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமரின் டுவிட்டர் தளத்தில் 5.3 கோடி, பேஸ்புக்கில் 4.4 கோடி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.5 கோடி பேர் என ஏராளமான மக்கள் அவரது வலைத்தள கணக்குகளில் பின்தொடர்பாளர்களாக இருக்கின்றனர். இதைத்தவிர பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்திலும் 3.2 கோடி பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

இதன் மூலம் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முன்னணி இடம் பெற்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டில் உலக அளவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு பிறகு 3-வது இடத்தை பிரதமர் மோடி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தனது சமூக வலைத்தள கணக்குகளை கையாளும் பொறுப்பை மார்ச் 8-ந் தேதி ஒருநாள் மட்டும் பெண் சாதனையாளர்களிடம் வழங்கப்போவதாக கடந்த வாரம் அவர் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கடந்த வாரம் வெளியிட்ட ‘டுவிட்’ செய்தியில், ‘இந்த மகளிர் தினநாளில் (நேற்று), எனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தையும் தங்கள் வாழ்க்கையாலும், பணியாலும் நமக்கு உத்வேகம் அளித்த பெண்களிடம் வழங்கப்போகிறேன். இது லட்சக்கணக்கானவர்களை ஊக்கமூட்டுவதற்கு அவர்களுக்கு உதவும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிரதமர் அறிவித்தபடியே நேற்று ஒருநாள் தனது வலைத்தள கணக்குகளை 7 பெண் சாதனையாளர்களிடம் வழங்கினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் கூறியதுபோல, சமூக வலைத்தள கணக்குகளை பெண் சாதனையாளர்களிடம் அளிக்கிறேன். இந்த கணக்குகள் மூலம் 7 பெண் சாதனையாளர்கள் நாள் முழுவதும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்வார்கள். சில நேரங்களில் உங்களுடன் கலந்துரையாடலும் நடத்துவார்கள்’ என்று கூறியிருந்தார்.



 

இதைத்தொடர்ந்து பிரதமரின் சமூக வலைத்தள கணக்குகள் மூலம் ‘அவள் நமக்கு உத்வேகம் அளிக்கிறாள்’ என்ற ஹேஷ்டேக் மூலம் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் என பல்வேறு பதிவுகள் வெளியாகின. இந்த கணக்குகளை 7 பெண் சாதனையாளர்கள் கையாண்டனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ், மாளவிகா ஐயர் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய உணவு வங்கி என்ற பெயரில் ஏராளமான தன்னார்வலர்களுடன் இணைந்து அமைப்பு ஒன்றை நடத்தி வரும் சினேகா மோகன்தாஸ், நாள்தோறும் ஏராளமான ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருகிறார்.

பிரதமர் மோடியின் டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘எங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் உள்ளன. அவற்றின் மூலம் ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளோம். சமையல் மாரத்தான், தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற நடவடிக்கைகளையும் நாங்கள் நடத்தி வருகிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

தனது 13-வது வயதில் குண்டுவெடிப்பு ஒன்றில் கைகள் இழந்து, கால்களும் பாதிக்கப்பட்ட மாளவிகா ஐயர் தன்னம்பிக்கை பேச்சாளராகவும், மாற்றுத்திறனாளி ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். அத்துடன் இவர் மாடலிங்கும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது பதிவில், ‘எதற்காகவும் முயற்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் வரம்புகளை மறந்து விடுங்கள. நம்பிக்கையுடன் உலகை வெல்லுங்கள்’ என்று குறிப்பிட்டார்.

இவர்களைத்தவிர ஆரிபா ஜான் (காஷ்மீர்), கலாவதி தேவி (உத்தரபிரதேசம்), வீணா தேவி (பீகார்), விஜயா பவார் (மராட்டியம்), கல்பனா ரமேஷ் ஆகியோரும் பிரதமர் மோடியின் சமூக வலைத்தள கணக்கு களை நேற்று கையாண்டனர்.

மேலும் செய்திகள்