பறிமுதல் செய்த காரில் உல்லாச பயணம் செய்த போலீசாருக்கு நேர்ந்த கதி
உத்தர பிரதேசத்தில் பறிமுதல் செய்த காரில் உல்லாச பயணம் செய்த போலீசார் 3 மணிநேரம் காருக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்துள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தலையிட்ட போலீசார் ஆடம்பர் ரக கார் ஒன்றை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்பின்னர் அந்த காரில் லகீம்பூர் கிரி நோக்கி பயணம் செய்துள்ளனர். லக்னோவில் இருந்து 140 கி.மீட்டர் தொலைவுக்கு சென்ற கார் திடீரென நின்றது.
ஆனால் அதற்கான காரணம் காரில் இருந்த போலீசாருக்கு தெரியவில்லை. 3 மணிநேரம் பூட்டிய காருக்குள் சிக்கி தவித்த அவர்கள் அதன்பின்பு காரின் உரிமையாளர் வந்தபின்னரே வெளியே வந்துள்ளனர்.
அவர்களில் கோமதி நகர் போலீஸ் உயரதிகாரியான பரமேந்திரா குமார் சிங் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் அடங்குவர். பறிமுதல் செய்த காரில் நீண்ட தொலைவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட போலீசாரை வெகுதூரத்தில் வைத்து ஜி.பி.எஸ். வசதியால் காரின் உரிமையாளர், காருக்குள் வைத்து பூட்டியுள்ளார். காரின் என்ஜினையும் அணைத்து உள்ளார்.
காரை தவறாக பயன்படுத்தி உள்ளனர் என லக்னோ போலீசாரிடம் புகார் ஒன்றும் அளித்து உள்ளார். இனி வருங்காலத்தில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் உறுதி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என துணை கமிஷனர் சந்தோஷ் கூறியுள்ளார்.