செங்கல்பட்டில் இயங்கிவரும் இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை புனரமைக்க வேண்டும் - டி.கே.ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தல்
செங்கல்பட்டில் இயங்கிவரும் இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை புனரமைக்க வேண்டும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.;
புதுடெல்லி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர், செங்கல்பட்டில் இயங்கிவரும் இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தார். மேலும் சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனையும் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தற்போது மூடப்படும் நிலையில் உள்ளது. இந்நிறுவனத்தை புனரமைத்து உற்பத்தியை தொடங்க உடனடியாக தற்போது ரூ.565 கோடி நிதி தேவையாக உள்ளது. உலகத்தரத்தில் உற்பத்தியை மேற்கொள்ளவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலுமானதொரு ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பு வளாகமாகவும் இது உள்ளது.
எனவே தேசத்தின் சுகாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கணக்கில் கொண்டு செங்கல்பட்டில் இயங்கிவரும் இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை உடனடியாக புனரமைக்கவும், மருந்து உற்பத்தியை தொடங்கவும் தேவையான நிதியை அளித்து உதவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.