கலவரம் தொடர்பான மனுக்களை நாளை விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டெல்லி கலவரம் தொடர்பான மனுக்களை ஐகோர்ட்டு நாளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-03-04 22:30 GMT
புதுடெல்லி,

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 24-ந்தேதி ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. 4 நாட்கள் நடைபெற்ற இந்த கலவரத்தில் 48 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

கலவரம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, வன்முறையை கட்டுப்படுத்தவும், வன்முறையாளர்களை கைது செய்யவும் கோரி சமூக ஆர்வலர் ஹர்ஷ் மண்டேர் தரப்பில் கடந்த மாதம் 25-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.என்.பட்டேல், சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மாதம் 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசை இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் முன்னாள் சமூக ஆர்வலர் ஹர்ஷ் மண்டேர் உள்ளிட்ட சிலர், வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்புணர்வு பேச்சு பேசி, வடகிழக்கு டெல்லியில் கலவரம் உருவாக காரணமான சில தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், “இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருவதால் சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுக்கள் மீது தலையிடாது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை இப்படி நீண்ட நாட்களுக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்து இருப்பது தேவையற்றது. இதுபோன்று விசாரணையை ஒத்திவைப்பது கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை மறுப்பதற்கு ஈடானதாகும். இதுபோன்ற விவகாரங்களை விசாரிப்பதில் தாமதம் ஏற்படக் கூடாது. எனவே இந்த மனுக் களை ஐகோர்ட்டு வரும் வெள்ளிக்கிழமை (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை முடித்து வைக்கிறோம்” என உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுதாரர் ஹர்ஷ் மண்டேர் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய விடியோ பதிவுகள் கிடைத்துள்ளன என்று கூறி அவற்றில் இருந்து சில பகுதிகளை கோர்ட்டில் வாசித்துக்காட்டினார். இது தொடர்பாக வரும் திங்கட்கிழமை நாங்கள் சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். எனவே வெள்ளிக்கிழமையே இந்த மனுவை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அறிவுரை வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் இந்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

எனவே டெல்லி கலவரம் தொடர்பான வழக்குகள், நாளை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும்.

மேலும் செய்திகள்