மனைவி கொலை வழக்கில் கணவனுக்கு சிறை; 7 வருடங்களுக்கு பின் காதலருடன் இருந்த மனைவி கண்டுபிடிப்பு

மனைவி கொலை வழக்கில் சிறை சென்ற கணவன் 7 வருடங்களுக்கு பின் காதலருடன் இருந்த மனைவியை கண்டுபிடித்து உள்ளார்.

Update: 2020-03-04 15:28 GMT
கேந்திரபாரா,

ஒடிசாவின் கேந்திரபாரா நகரில் பத்குரா பகுதியில் சாலியா கிராமத்தில் வசித்து வருபவர் அபய சுடர்.  இவருக்கும் சமகோலா கிராமத்தில் வசித்து வந்த இதிஸ்ரீ மொகரனா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 7ந்தேதி திருமணம் நடந்தது.

இதன்பின் 2 மாதங்கள் கழித்து இதிஸ்ரீ ஒரு நாள் காணாமல் போய்விட்டார்.  அவரை பல இடங்களிலும் அபய சுடர் தேடியுள்ளார்.  ஆனால் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பத்குரா போலீசில் ஏப்ரல் 20ந்தேதி புகார் அளித்துள்ளார்.  அதே வருடம் மே 14ந்தேதி இதிஸ்ரீயின் தந்தை பிரகலாத் மொகரனா, தனது மகளை வரதட்சணை கேட்டு அவரது கணவர் துன்புறுத்தியுள்ளார் என புகார் அளித்திருக்கிறார்.

அதில், தனது மகளை கொன்று உடலை அபய சுடர் எங்கேயோ புதைத்து இருக்கிறார் என்றும் தெரிவித்து உள்ளார்.  இதனை தொடர்ந்து அபய சுடரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

ஒரு மாத சிறை தண்டனைக்கு பின் ஜாமீனில் வெளிவந்த அபய சுடர், மனைவியை கண்டுபிடித்து தன்னை நிரபராதி என நிரூபிக்க முடிவு செய்து தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

வேறு யாருடனோ தனது மனைவி தொடர்பில் இருக்க கூடும் என சந்தேகித்த அபய சுடர், அவரை தேடி பல இடங்களுக்கு சென்றுள்ளார்.  இறுதியில், பிபிளி என்ற இடத்தில் தனது காதலருடன் வசித்த  மனைவியை கண்டுபிடித்து உள்ளார்.

அபய சுடர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் பிபிளி சென்று இதிஸ்ரீ மற்றும் அவரது காதலர் ராஜீவ் லோச்சன் மொகரனா ஆகியோரை கைது செய்தனர்.  அவர்கள் இருவரும் கேந்திரபாராவில் நீதிபதி ஒருவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அதில், தனது திருமணத்திற்கு முன்பே ராஜீவ் உடன் தொடர்பில் இருந்து வந்தேன் என இதிஸ்ரீ தெரிவித்து உள்ளார்.  எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அபய சுடருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

திருமணம் முடிந்த 2 மாதங்களுக்கு பின் ஒரு நாள் இரவில், கணவருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து தப்பி சென்று ராஜீவுடன் சேர்ந்துள்ளார்.  அவர்கள் இருவரும் குஜராத்திற்கு தப்பியோடி 7 வருடங்களாக வசித்து வந்துள்ளனர்.  இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சமீபத்தில் அவர்கள் ஒடிசாவுக்கு வந்துள்ளனர்.  ராஜீவ், புவனேஸ்வரில் ஆட்டோ ஓட்டி, வருவாய் ஈட்டி பிபிளி நகரில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதுபற்றி அபய சுடர் கூறும்பொழுது, இதிஸ்ரீயை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நானே இந்த விவகாரத்தினை கையிலெடுத்து கொண்டேன்.  இந்த 7 வருடங்களாக பல இடங்களுக்கு சென்று அவளை தேடினேன்.  இதில், நான் நிரபராதி என நிரூபித்து உள்ளேன்.  திருப்தி அடைந்தவனாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்