மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ; 8 எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;

Update: 2020-03-04 03:25 GMT
போபால்,

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  231 இடங்களை கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியாக கமல் நாத் பதவி வகித்து வருகிறார். 107 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. 

ஒரு ஆண்டுக்கு மேலாக கமல்நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில்,  மத்திய பிரதேச அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஆளும் காங்கிரஸ் ட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் என 8 எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்திச் சென்றதாக அம்மாநில கல்வித்துறை மந்திரி ஜிது பட்வாரி குற்றம் சாட்டியுள்ளார். 

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அளித்த ஜிது பட்வாரி மேலும் கூறும் போது, “ ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டத்துடன் எங்களுக்கு ஆதரவான 8 எம்.எல்.ஏக்களை முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடத்திச்சென்றுள்ளனர். பாஜக எங்களை கட்டாயமாக சிறைவைத்துள்ளதாக எம்.எல்.ஏக்களும் எங்களிடம் தெரிவித்தனர். அவர்களை மீட்டு கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்றார். 

மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மற்றும் அவரது மகன் ஜெய்வர்தன் சிங் ஆகியோர், எம்.எல்.ஏக்களை சந்திக்க அரியானா ஓட்டல் சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நேற்று இரவு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திக் விஜய் சிங், “ கமல்நாத் அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்து  அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக அரசு முயற்சிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.  

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மேற்கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்துள்ள பாஜக, பரபரப்பை உருவாக்கும் நோக்கில்  திக் விஜய் சிங் பொய்யான கருத்துக்களை பரப்பி வருகிறார். அவருடைய கருத்தை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார். 

மேலும் செய்திகள்