டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் மாணவர், மாணவி பிணமாக மீட்பு: தற்கொலையா? போலீஸ் விசாரணை

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் மாணவர், மாணவி பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அது தற்கொலையா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2020-03-01 20:39 GMT
புதுடெல்லி,

லடாக்கை சேர்ந்த ஒரு மாணவரும், மாணவியும் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். இதில் மாணவர் ஜாமியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும், மாணவி விஜய் நகரிலும் தங்கியிருந்தனர். 23 வயதுடைய இவர்கள் இருவரும் நேற்று அந்த மாணவரின் ஜாமியா நகர் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தனர்.

இந்த வீடு நேற்று வெகு நேரம் திறக்காமல் இருந்ததால், குடியிருப்பின் பாதுகாவலரும், அவரது மகனும் இணைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவரும், மாணவியும் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இருவரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர், மாணவி இருவரின் கழுத்திலும் காயம் இருந்தது. மேலும் அந்த அறையில் இருந்து 2 கத்திகளும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் பிணத்துக்கு அருகே ஒரு தற்கொலை கடிதமும் இருந்ததாக கூறிய போலீசார், அதில் எழுதியிருந்த விவரங்களை வெளியிடவில்லை.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்