ராணுவத்தின் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேர் பலி: காஷ்மீர் எல்லையில் பரபரப்பு

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவத்தின் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேர் பலியாயினர்.

Update: 2020-01-10 15:36 GMT
ஜம்மு,

காஷ்மீர் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி உயிர்ப்பலிகளை ஏற்படுத்தி வருகிறது.

அந்தவகையில் எல்லையோர மாவட்டங்களில் ஒன்றான பூஞ்ச் மாவட்டத்தின் குல்பூர் செக்டாரில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தானின் பீரங்கி குண்டுகள் எல்லையோர கிராமங்களில் வந்து விழுந்து வெடித்தன.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த அத்துமீறலின்போது இந்திய எல்லைப்பகுதியில் ராணுவ சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி குண்டு ஒன்று இந்த தொழிலாளர்கள் மீது விழுந்து வெடித்தது. இதில் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 3 பேருக்கும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலால் எல்லைப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்