உச்சகட்ட பதற்றம் : ஈரான், ஈராக் மீது விமானங்கள் பறக்க அமெரிக்கா - இந்தியா தடை
ஈரான், ஈராக் மீது அமெரிக்க, இந்தியா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளன.;
புதுடெல்லி
ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் குறிப்பிட்ட வான்வெளியில் பறக்க அமெரிக்க விமானங்களுக்கு அவசரகால தடை விதிப்பதாக அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் செய்து உள்ளது. இந்நிலையில், சுலைமானி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியது.
ஈரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், போயிங் 737 ரகத்தை சேர்ந்தது. தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஈரான் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஈரான், ஈராக் மீது அமெரிக்க விமானங்கள் பறக்க அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் அவசரகால தடை விதித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பின்னர் ஈராக், ஈரான், ஓமான் வளைகுடா மற்றும் ஈரான்-சவுதி அரேபியா இடையேயான நீர்நிலைகள், வான்வெளியில் அமெரிக்க விமானங்கள் இயங்குவதை தடை செய்வதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானங்கள் ஈரான், ஈராக், வளைகுடா வான்பகுதிக்குள் செல்லவேண்டாம் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அது போல் தேவையின்றி இந்தியர்கள் ஈராக் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.