வங்கி அதிகாரிகள் துணையுடன் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1,038 கோடி கருப்பு பணம்
கடந்த 2014-2015 நிதியாண்டில், ஹாங்காங்குக்கு ரூ.1,038 கோடி கருப்பு பணம் அனுப்பப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. சென்னை நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளின் 4 கிளைகளில் 48 நிறுவனங்களின் பெயரில் 51 நடப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை சென்னையை சேர்ந்தவர்களின் நிறுவனங்கள் ஆகும்.
இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கான முன்பணம் என்ற வகையில், ரூ.488 கோடியே 39 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், 24 கணக்குகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய சுற்றுலா பயணிகளின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்ற வகையில் 27 கணக்குகள் மூலம் ரூ.549 கோடியே 95 லட்சம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் ஆண்டு விற்றுமுதல் லட்சக்கணக்கில் இருக்கும்போது, கோடிக்கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இது கருப்பு பணம் ஆகும். இதில் ஈடுபட்ட முகமது இப்ராம்சா ஜானி, ஜிந்தா மிதார், நிஜாமுதின் ஆகியோருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டுள்ளது.
இதையெல்லாம் கண்டுபிடித்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், மேற்கண்ட 3 பேர் மற்றும் 48 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.