டெல்லி ஜே.என்.யூ.வளாகத்தில் மாணவர்கள் சங்க தலைவர் மீது தாக்குதல்: போலீஸ் குவிப்பு
டெல்லி ஜே.என்.யூ. வளாகத்தில் மாணவர்கள் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ஜே.என்.யூ. வளாகத்தில் மாணவர்கள் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மீது முகமூடி அணிந்து வந்த நபர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இரும்பு தடிகளைக்கொண்டு கண்ணில் பட்டவர்களை எல்லாம் மர்மநபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பேராசிரியர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த தாக்குதலை அடுத்து ஜே.என்.யூ. வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவர்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதையடுத்து, ஜே.என்.யூ. வளாகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,
'ஜே.என்.யூ. வளாகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வன்முறையை தடுத்து நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வேணடும் என்று கூறினார்.
மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் நாடு எப்படி முன்னேறும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏபிவிஎச்-ஐ சார்ந்தவர்கள் தான் முகமூடி அணிந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
டெல்லி ஜே.என்.யூ.வில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.