குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு

குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-01-04 23:00 GMT
அம்ரேலி, 

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஹரிகிருஷ்ணா ஏரிக்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு மகாத்மா காந்தி சிலை ஒன்று நிறுவப்பட்டது. இந்த சிலையை நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர்.

சிலை உடைந்து நொறுங்கி கிடப்பதை நேற்று காலையில் பார்த்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போலீசார், சிலையை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சூரத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான சவ்ஜிபாய் தோலக்கியாவின் அறக்கட்டளை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்த ஏரி கட்டப்பட்டு இருந்தது. பிரதமர் மோடிதான் இந்த ஏரியை திறந்து வைத்தார்.

இந்த ஏரி கட்டப்பட்டதை பிடிக்காத யாரும் காந்தி சிலையை உடைத்தார்களா? அல்லது சமூக விரோதிகள் யாரும் இதன் பின்னணியில் உள்ளனரா? என விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அம்ரேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்