இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது - சுப்பிரமணிய சாமி கருத்து

இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சுப்பிரமணிய சாமி தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

Update: 2020-01-04 00:00 GMT
புதுடெல்லி, 

பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ‘அயோத்தி ராமர் கோவில் மற்றும் இந்து மறுமலர்ச்சி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

அரச நீதிமன்றங்களின் பாணியில், போர் நடைமுறைகளில், விவசாய நிலங்களை பராமரித்தலில் மற்றும் பரவிக் கிடக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்தியா ஆட்சிக் கலையில் சிறந்த ஒன்று என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரவலாக்கப்பட்ட கிராமங்களின் தன்னாட்சி, பஞ்சாயத்து நடைமுறைகள் ஆகியவை இதனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

சுதந்திரம் பெறாத ஒரு நாட்டின் வரலாற்றை அதனை ஆட்சி செய்த வெளிநாட்டவர் களால் எழுதிவிட முடியாது.

நமது புராண ஆதாரங்களை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கும், பண்டைய இந்தியாவின் தவறாக சித்தரிக்கப்படாத, நன்கறியப்பட்ட வரலாற்றை ஊக்குவிப்பதற்கும் நேரம் வந்துவிட்டது.

இந்தியர்களின் வரலாற்றை பற்றி இந்தியர்கள்தான் எழுத வேண்டும். அத்தகைய மீண்டும் எழுதப்பட்ட வரலாறு, போர் மற்றும் அரசியல் நெருக்கடிகளின் காலங்களில் எந்த நாடு தனது அடையாளத்தை மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தியதோ அந்த தேசத்தின் அற்புதமான தொடர்ச்சியை வெளிப்படுத்தும்.

பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்ட வரலாற்றில் கூறப்பட்டுள்ள ஆரிய-திராவிட பிளவு என்பது மேக்ஸ் முல்லர் போன்ற வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். இந்தியாவின் வரலாற்று ஆவணங்களில் இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.

இந்தியாவில் ஒருபோதும் ஆரியர் படையெடுப்பு நடந்ததில்லை என்பது மென்மேலும் தெளிவாகி வருகிறது. இந்திய துணைகண்டத்தின் மீது அதன் குடியேற்றவாசிகளால் திணிக்கப்பட்ட கோட்பாடு ரோமிலா தப்பார், மிஷனரிகள், கம்யூனிஸ்டுகள் போன்ற நேரு காலத்து வரலாற்று ஆசிரியர்களால் இன்றும் உயிரோடு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது வரலாற்று புத்தகங்களை மீண்டும் எழுதாதது வரை, அதன் பண்டைய மற்றும் பழங்குடி நாகரிகத்தை பற்றி இந்திய குழந்தைகளுக்கு கற்பிக்காதவரை மற்றவர்களும் வந்து இந்தியாவை சுரண்டுவார்கள்.

இவ்வாறு அந்த புத்தகத்தில் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்