குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மாநில சட்டசபைகளுக்கு சிறப்பு உரிமை உண்டு - பினராயி விஜயன் உறுதி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மாநில சட்டசபைகளுக்கு சிறப்பு உரிமை இருப்பதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

Update: 2020-01-01 22:15 GMT
திருவனந்தபுரம், 

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாநில சட்டசபையில் நேற்று முன்தினம் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தீர்மானத்தை கொண்டு வந்தார். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

பினராயி விஜயன் கொண்டு வந்த இந்த தீர்மானம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. பா.ஜனதாவின் ஒரே உறுப்பினரான ராஜகோபால் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசினார்.

இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்று இருக்கிறது.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். குடியுரிமை தொடர்பான எந்த சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது எனவும், கேரள சட்டசபை உள்ளிட்ட எந்த மாநில சட்டசபைக்கும் அந்த அதிகாரம் இல்லை எனவும் அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக கேரள இடதுசாரி அரசும், பினராயி விஜயனும் சிறந்த சட்ட ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதைப்போல குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக பினராயி விஜயனுக்கு எதிராக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பா.ஜனதா எம்.பி. நரசிம்ம ராவ் புகார் அளித்து உள்ளார்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்-மந்திரி பினராயி விஜயனிடம், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தின் கருத்துகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கும்போது கூறியதாவது:-

மாநில சட்டசபைகளுக்கு என சிறப்பு உரிமைகள் உள்ளன. அதன்மூலம் இதுபோன்ற (குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான) தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும். இதுபோன்ற நடவடிக்கைகள் எங்கேயும் கேட்டதில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய சூழலில் எந்த வாய்ப்பையும் நாம் புறந்தள்ள முடியாது. ஏனெனில் முன்னெப்போதும் இல்லாத சம்பவங்கள் நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

சட்டசபைகளுக்கு என சிறப்பு பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. அதை யாரும் மீறக்கூடாது. அரசியல்சாசனத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒரு சட்டத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்றை முதல் மாநிலமாக கேரளா நிறைவேற்றி இருக்கிறது. ஏனெனில் இந்த அடிப்படை உரிமைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

மேலும் செய்திகள்