ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6- ந்தேதி சபரிமலை வருகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6-ந்தேதி சபரிமலை வருகை தர உள்ளார்.

Update: 2020-01-01 13:09 GMT
திருவனந்தபுரம், 

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி நடை திறக்கப்பட்டு உள்ளது.

வருகிற 15-ந்தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடை பெறுகிறது. அப்போது சபரி மலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும். 

இதனால் சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து கடிதமும் வந்துள்ளது. அதன்படி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வருகிற 5-ந்தேதி ஜனாதிபதி கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குகிறார்.

மறுநாள் (6-ந்தேதி) திங்கட்கிழமை காலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்கிறார். இதற்கு முன்பு 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து உள்ளார். தற்போது சபரிமலை செல்லும் 2-வது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்