உன்னாவ் கிராமம் சென்ற பாஜக மந்திரிகளுக்கு கடும் எதிர்ப்பு

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-12-07 12:49 GMT
லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம் பெண், கோர்ட்டு விசாரணைக்கு செல்லும் வழியில் பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டார்.

இதில் 95 சதவீதம் காயமடைந்த அப்பெண், சுமார் 40 மணி நேர  போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, உத்தரபிரதேசத்தில் ஆளும்  பாஜக மந்திரிகளான சுவாமி பிரசாத் மயூரா, கமல் ரானி மற்றும் உள்ளூர் எம்.பி சாக்‌ஷி மகராஜும் சென்றனர். ஆனால்,  ஏற்கனவே உன்னாவ் கிராமம் சென்றிருந்த  இந்திய தேசிய மாணவர்கள் சங்கத்தினர், காங்கிரசார் உள்பட ஏராளமானோர் மந்திரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்புறப்படுத்தினர்.  போராட்டக்காரர்களின் எதிர்ப்பு கோஷத்துக்கு மத்தியில், மந்திரிகளின் கார் நத்தை போல ஊர்ந்து சென்றது. 

பின்னர், இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மந்திரிகள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இளம் பெண்  கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. பெண்ணின் குடும்பத்தினர் எத்தகைய  விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்கிறார்களோ? அந்த விசாரணையை நடத்த தயாராக உள்ளோம். இதில் அரசியலுக்கு இடம் இல்லை” என்றனர்.

மேலும் செய்திகள்