உன்னாவ் சம்பவம்: உத்தரபிரதேசத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமையை காட்டுகிறது - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமையை உன்னாவ் சம்பவம் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2019-12-07 07:23 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம் பெண், கோர்ட்டு விசாரணைக்கு செல்லும் வழியில் பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டார். 

இதில் 95 சதவீதம் காயமடைந்த அப்பெண், சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில்  உன்னாவ் சம்பவம், உத்தர பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமையை காட்டுகிறது  என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக  அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

இந்த  துயரமான நேரத்தில் உன்னாவ் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தைரியம் கொடுக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

 சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசை விமர்சித்த அவர்,  பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க முடியவில்லை என்பது நமது அனைவரின் தோல்வி.  சமுதாயத்தில் நாம் அனைவரும் குற்றவாளிகளே. 

மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக உள்ளன. உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, அரசு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை. அவரது புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்